திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள முத்தப்புடையான்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், கடுமையான குடிநீர் பிரச்னை நிலவிவருகிறது.
இந்நிலையில் இப்பகுதிக்கு காவிரி குடிநீர் கடந்த ஒரு மாதமாக முறையாக வழங்கப்படவில்லை. குடிநீர் பிடிக்க நீண்ட தூரம் செல்லும் அக்கிராமத்து மக்கள், கிராமத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் பொதுமக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுத்தபாடில்லை.
இதனைக் கண்டித்து இன்று காலை ஏராளமான பெண்கள் காலிக் குடங்களுடன் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முத்தப்புடையான்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த இந்த மறியலால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பேருந்துகள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துறையினர் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.