திருச்சி: மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் சுகாதாரச்சீர்கேடாக உள்ளது. காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களும், ஆதார் மற்றும் இ-சேவை மையங்களும் செயல்படும் இந்த அலுவலக வளாகத்திற்குள் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
மேலும் ஆதார் மற்றும் இ-சேவை மையங்களுக்கு வரும் பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று, தங்களது வேலையை முடிக்க வேண்டி இருக்கிறது. அப்போது கழிப்பிட வசதிக்காக, சுமார் அரை கிலோ மீட்டர் தூரமுள்ள கட்டண கழிப்பிடத்திற்குச்செல்லும் அவல நிலை உள்ளது.
ஒரு சிலர் அதற்கு மாற்றாக வீட்டிலேயே இயற்கை உபாதைகளை கழித்துவிட்டோ அல்லது வீட்டிற்கு சென்ற பிறகோ தான் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது. இதனால் மாதவிடாய் நாட்களில் வரும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகும் அவல நிலை உள்ளது.
மேலும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் என தனித்தனியாக கழிப்பிட வசதிகள் இருந்தும் அதில் யாரும் உள்ளே சென்று இயற்கை உபாதைகளை கழிக்க முடியாத அளவிற்கு சுகாதாரச் சீர்கேடாக இருக்கிறது. இந்தக் கழிப்பிடத்தைக் கட்டி, சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்திய பொதுமக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்த முடியாததால் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மட்டும் தான் மாறினார்களே தவிர கழிப்பிட கட்டடத்தின் காட்சி மாறவில்லை. இனியாவது, தற்போது உள்ள அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் கூட்டு முயற்சியால் பொதுமக்களின் இந்த அவல நிலை மாற வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: மழை பாதிப்பு ...நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலைமறியல்