திருச்சி: மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தலைமையில் மே 25ஆம் தேதி சிறப்பு மனுநீதி நாள் நடைபெற்றது. இதில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது, வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை நிகழ்ச்சி தொடங்குவதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே முகாமிற்கு அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டனர்.
பின்னர் வந்த மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி, பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்கள் மற்றும் பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்குவதற்காக அனைவருக்கும் பேப்பர் தட்டுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு சாப்பாடு இல்லாததால் பாதி பேர் வெறும் தட்டுடனே கிளம்ப தொடங்கிவிட்டனர். அதன்பின்னர் சற்று நேரம் கழித்து அங்கு ஆட்டோ மூலம் கொண்டுவரப்பட்ட சாப்பாட்டிற்கு பொதுமக்கள் நான், நீ என முந்திக்கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தை கண்ட ஆளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆட்சியர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் சாப்பிட முறையான முன்னேற்பாடு இல்லாதது மன வேதனைக்கு உள்ளாக்கியதாக கூறி சென்றனர்.
இதையும் படிங்க: பாமக 2.0: ஜி.கே.மணியின் ஐடியா தானாம்! - சொல்கிறது பாமக