திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே எம். புத்தூர், சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம்மாள் (65). இவர் நேற்று திடீரென காலமானார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது உடலை எடுத்து செல்லும் வழியானது தன்னுடையது எனவும் இந்த வழியாக உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் கூறி ஒருவர் இடையூறு செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் பொதுமக்களும் தங்கம்மாள் உடலை தொட்டியத்திலிருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் வைத்து கட்டைகளை போட்டு எரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தொட்டியம் காவல் துறை ஆய்வாளர் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மயானத்திற்கு பாதை அமைத்துத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தங்கம்மாள் உடலை உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை செய்தனர். உயிரிழந்தவரின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாலை தொடங்கிய போராட்டம் இரவுவரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.