திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது,
அடிப்படை வசதிகள் செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி கைவிட வேண்டும், பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்தது கண்டிக்கத்தக்கது, பாலக்கரை பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை கடந்த ஆறு மாதமாக வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வையாபுரியும், நிர்வாகிகளும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்றனர். பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வார்டு பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.