Trichy Sooriyur Jallikattu ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
திருச்சி: 'பொங்கல் பண்டிகை' என்றாலே, தமிழரின் பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையான 'ஜல்லிக்கட்டு' போட்டி நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2ஆம் நாள் ஶ்ரீநற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
இதுவே, திருச்சி மாவட்டத்தில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள். அப்படி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.
இதையும் படிங்க: போக்சோ சட்டத்தில் 20 ஆண்டு சிறை தண்டனை; நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி.. திருச்சியில் பரபரப்பு!
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடுகளாக விழா மேடை மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி விழா குழுவினர் சார்பில் நடைபெற்று வருகிறது. 400 மீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைத்தல், ஜல்லிக்கட்டு களத்தில் 15 மீட்டர் வரை தேங்காய் நார்கள் கொட்டுதல், விழா மேடை அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுமார் ஆயிரக்கணக்கானோர் வருவதால், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் சூரியூர் கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கானப் பணிகளை சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் விஜி ஆறுமுகம், சூரியூர் அழகர், சாமிநாதன், மீனாட்சி சுந்தரம், முருகன், செந்தில் குமார் ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாடுகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்தாண்டில் இந்தியாவிலேயே தூய்மையான நகரமாக திருச்சி முதலிடம் பிடிக்கும்.. திருச்சி மேயர் உறுதி!