திருச்சி: மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடந்த தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்.10) கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முடிவின்படி, ஈரோடு இடைத்தேர்தலில் (Erode East By-Election) தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டுடன், ஆனந்த் என்பவரை வேட்பாளராக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
எந்த கட்சியிலிருந்தும் பிரிந்து வராமல் சுயம்புவாக உருவான தங்கள் தேமுதிக கட்சி 2011 வரை தனித்தே தேர்தல் களத்தை சந்தித்து வந்ததாகவும், அதன்படி 13 இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளதாகவும் கூறினார். எனவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்துப்போட்டி என்பது தேமுதிகவுக்கு புதிதல்ல எனப் பேசினார்.
பண பலம், ஆட்சி, அதிகார பலங்களை எதிர்த்து தான் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது எனவும்; யார் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ளார்களோ அவர்களுக்கே வெற்றி என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இதற்கும் முன்பு, ஆண்ட கட்சியும் ஆளுங்கட்சியும் பல தேர்தல்களில் டெபாசிட் இழந்த வரலாறும் உண்டு என்பதால், தேமுதிக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும்; எதுவும் நிரந்தரமில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அனைத்தும் மாறக்கூடியது தான் என்பதை தேர்தல் முடிவு காட்டிவிடும் என்றும் கூறினார்.
தங்களது தேமுதிகவை இயக்குபவர் விஜயகாந்த் மட்டும் தான், அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் அதை இயக்கவும் முடியாது என்றும்; அவருடைய சொல்படிதான் இக்கட்சி செயல்படும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் அளித்த தங்கப் பேனா: கருணாநிதிக்கு விழா எடுத்தபோது, தங்கத்தால் பேனாவை அவருக்கு விஜயகாந்த் கொடுத்தவர் என்றும்; அதனால், மீண்டும் மீண்டும் எழுதாத பேனாவுக்காக ரூ.81 கோடி செலவு செய்வது அவசியம் இல்லை என்பது எங்கள் நிலைப்பாடு என்றும்; மெரினா கடலுக்குள் கருணாநிதி பேனா சிலை அமைக்க (Karunanidhi Pen Statue) உள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் என நாட்டுக்கு செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் உள்ளன எனவும்; இந்த பணத்தை அதற்காக செலவு செய்யலாம் என்றும் பிரேமலதா கூறினார். 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் காலச்சூழ்நிலை, கருத்து வேறுபாடு போன்றவை காரணமாக பிரியும் சூழல் ஏற்பட்டதாகவும்; வருங்காலத்தில் கட்சித் தலைவர் நல்ல முடிவை அறிவிப்பார் எனவும் கூறினார்.
அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருந்தும்; அதை விட்டுவிட்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி நகைப்புக்கு உள்ளாகி வருவதாக சாடினார். இதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்; அதிருப்தியை தான் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
குறுகிய காலத்தில் கெட்டப்பெயர் எடுத்த ஆட்சி: 'மிகக்குறுகிய காலத்தில் மக்களிடம் கெட்டப்பெயர் எடுத்துக்கொண்ட ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதுமே பாராட்டும் படியான எந்த செயல்பாடுகளும் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, நல்லாட்சி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுகவினர் உள்ளனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஈரோடு இடைத்தேர்தலில், தேமுதிகவுக்கு கிடைக்கும் வெற்றி தமிழ்நாடு முழுவதும் பலம் என்ன என்பதை தெரியப்படுத்தும்' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவை தாங்கி பிடிக்கிறதா அதிமுக? - ஈபிஎஸ் பேச்சால் சர்ச்சை!