கரோனா பரவல் காரணமாக நேற்று (ஜனவரி 6) முதல் இரவு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகரம் தில்லைநகரில் உள்ள பிரபல மருந்தகத்தில் பணியாற்றுபவர்கள் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு மருந்தகத்தைப் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
மீண்டும் இன்று (ஜனவரி 7) அதிகாலை பணியாளர்கள் மருந்தகத்தைத் திறக்க வந்தபோது அதன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோயிருந்தது.
இதனையடுத்து மருந்தகத்தின் மண்டல மேலாளர் விஜயரங்கன் தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். விரல் ரேகை வல்லுநர்களும் சோதனை செய்துவருகின்றனர்.
இதேபோல அந்த மருந்தகத்தின் அருகில் உள்ள செல்போன் விற்பனையகத்திலும் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கடையின் பூட்டை உடைத்து மூன்று திருடர்கள் கடைக்குள் சென்று திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன.
இதனை வைத்தும் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். தில்லைநகர் 10ஆவது கிராஸில் உள்ள துணிக்கடை ஒன்றிலும் திருடர்கள் திருட முயற்சி செய்துள்ளனர்.
மேலும் வணிக நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மேலரண் சாலையில் செயல்பட்டுவரும் ஒரு பைப் கடையில் 50 ஆயிரம் ரூபாயும் அதே பகுதியில் உள்ள மோட்டார் விற்பனை செய்யும் ஏஜென்ஸியில் 2.31 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டுள்ளது.
அதேபோல நடு குஜிலி தெருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடை கதவையும் உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. ஆனால் அங்கு பணம் ஏதும் இல்லாததால் திருடர்கள் வேறு எதையும் எடுக்காமல் சென்றுள்ளனர்.
பைப் கடையிலிருந்த சிசிடிவியில் ஒரு நபர் திருடும் காட்சி பதிவாகி உள்ளது. தில்லைநகரில் உள்ள செல்போன் கடையில் பதிவான சிசிடிவி காட்சியையும், அதேபோல மேலரண் சாலையில் உள்ள பைப் கடையில் பதிவான சிசிடிவி காட்சியையும் காவல் துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.
ஒரே கும்பல் அனைத்து கடைகளிலும் திருடி உள்ளார்களா? அல்லது வேறு வேறு கும்பலா? எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதேபோல அனைத்துக் கடைகளிலிருந்தும் விரல் ரேகைகளைச் சேகரித்த வல்லுநர்களும் ஆய்வு செய்துவருகின்றனர். ஒரே இரவில் ஐந்து கடைகளில் நடந்த திருட்டுச் சம்பவம் திருச்சி காவல் துறையினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புக்கு டாட்டா: காவல் துறையின் அதிரடி அட்வைஸ்