திருச்சி திருவானைக்காவல் வடக்கு 5ஆம் பிரகாரம் மணமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (52). ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது வீட்டில் ஆடு பண்ணை வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (அக். 23) இரவு இவரது வீட்டிலுள்ள ஆடுகளைத் திருடுவதற்காக ஒரு கும்பல் வந்துள்ளது. அப்போது, அங்கிருந்த நாய் சத்தம் போட்டதால் விழித்துக்கொண்ட முருகன் ஆடு திருடவந்த கும்பலை கண்டு, அவர்களை விரட்டியுள்ளார்.
அப்போது ஆடு திருடவந்த கும்பல் முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் இன்று (அக். 26) 15 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டிலிருந்த முருகனை சாலையின் நடுவே இழுத்துவந்து கழுத்தை அறுத்துள்ளனர்.
இதனைத் தடுக்கவந்த குடும்பத்தினரையும் அந்தக் கும்பல் விரட்டி, சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதற்கிடையே, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, முருகன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆடு திருடவந்த கும்பல் முருகனை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வாழ்வாதாரத்தை மீட்க ஆட்டோவில் நெல்லிக்காய் விற்கும் ஓட்டுநர் - தன்னம்பிக்கை மனிதன்!