திருச்சி: திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதியில் உள்ள முட்புதரில், நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், வெடிகுண்டுகளை கைப்பற்றிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாநகர் காவல் துறை ஆணையர் காமினி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக போதைப்பொருள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தடுக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் திருச்சி புறநகர்ப் பகுதிகளில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக குற்றங்கள் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து அங்கே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் உள்ள முட்புதரில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருபானந்தம், தயாளன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு ஒரு அட்டைப்பெட்டியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றிய நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக மீட்டு ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அதே போல் தடய அறிவியல் நிபுணர்களால் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் திடீர் நகரை சேர்ந்த பிரபல ரவுடியான குட்ட பாலு என்பவர் தனது உபயோகத்திற்காக நாட்டு வெடி குண்டுகளை தயார் செய்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து குட்ட பாலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் ரவுடியை தேடி வருகின்றனர்.
மேலும் முதற் கட்ட விசாரணையில் ரவுடி ஒருவரை மிரட்டுவதற்காக குட்ட பாலு நாட்டு வெடிகுண்டு தயார் செய்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் திடீர் நகர் பகுதியில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்துத் தகராறில் அண்ணன் மகனை கொலை செய்த நபர் - நடந்தது என்ன?