திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிச.28) முதல் திருச்சி மாவட்டத்தில் தங்கி தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். மேலும், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகளை அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த வகையில் இன்று (டிச.29) காலை லால்குடி பகுதியில், அவருக்கென்று தயாரிக்கப்பட்டுள்ள பிரத்தியேக திறந்த வேனில் நின்றபடி அவர் பரப்புரையை மேற்கொண்டார். தொடநர்ந்து, மாலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டையில் பரப்புரையில் ஈடுபட்டார்.
உதயநிதி முகத்தில் பிளாஸ்டிக் பை:
வேனில் இருந்தபடியே அவர் மேற்கொண்ட இந்த பரப்புரையின்போது கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்தும், சால்வை, வேஷ்டி போன்றவற்றை வழங்கியும் வரவேற்றனர். அவற்றை உதயநிதி வேனில் இருந்தபடியே குனிந்து வாங்கினார். அப்போது ஒரு நிர்வாகி ஆளுயர மாலையை உதயநிதிக்கு அணிவித்தார். அதையும் உதயநிதி குனிந்து வாங்கினார்.
அப்போது அந்த மலர் மாலையை கொண்டு வந்த பிளாஸ்டிக் பேப்பர் பையை அங்கிருந்தவர்கள் மாறிமாறி வீசிக்கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அந்த பிளாஸ்டிக் பேப்பர் பையை உதயநிதி முகத்தின் பக்கம் வீசினர். இதை சற்றும் எதிர்பாராத உதயநிதி தடுமாறினார்.
உடனடியாக கைக்குட்டையை வாங்கி தனது முகத்தை துடைத்துக்கொண்ட உதயநிதி, பரப்புரையை தொடர்ந்தார்.
இதையும் படிங்க: உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது? - குஷ்பூ கேள்வி!