திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனையடுத்து மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ-வும், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளருமான அப்துல் சமது, தலைமை மருத்துவர் முத்து கார்த்திகேயன், மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் கரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், கரோனா சிகிச்சையளிப்பதற்காக தமிழ்நாடு அரசால் கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது.
மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் பயன் பெறும் வகையில், தற்போது கரோனா வார்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை இந்த வார்டில் 42 பேர் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த வார்டுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம் நாடுகளிலிருந்து மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெறுவதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துரிதப்படுத்தினார். எந்த நிலையிலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றூவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.
மணப்பாறை அரசு மருத்துவமனை தவிர, தற்போது தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற சிறப்பு வார்டு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது தவிர மணப்பாறை தொகுதி முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்த, மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக வையம்பட்டி, சுக்காம்பட்டி, வளநாடு, பளுவஞ்சி உள்பட பல ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ததோடு, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வாஷிங் மெஷினையும்,மெத்தை விரிப்புகளையும் எம்.எல்.ஏ, அப்துல் சமது வழங்கினார்.
இதையும் படிங்க: மக்களின் மருத்துவர் அருண் பிரசாத்: 'இரவு, பகலெல்லாம் இவருக்கு கிடையாது'