திருச்சி பிராட்டியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் திருச்சி புறநகர், கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்ட தலைவர்கள் , நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்.
இதற்கு முன்பு காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாரதிய ஜனதா கட்சி சார்பில் விரைவில் தமிழ் கலை சங்கம் திருவிழா நடத்தப்படும். அனைத்து கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. கரோனா காலத்தில் கலைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் இல்லாமல் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதனால் அவர்களுக்கு வருவாய் வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலை கலாச்சாரத்தை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கின்னஸ் சாதனை புரியும் வகையில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்படும். சமீபத்தில் தமிழ் கடவுளை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தி பேசியுள்ளது. இதைத் தமிழக மக்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீது மக்களுக்கு கோபம் உள்ளது. இந்தக் கோபத்தைக் கொண்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்வார்கள். இனிமேல் தாமரைதான் ஆட்சியில் அமரும்" என்றார்.
'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் டிரண்ட் ஆகி வருகிறது என்பது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், "
இளைஞர்கள் வளரக்கூடாது என்று அப்படி செய்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இளைஞர்கள் நன்கு வளர வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம்.
தமிழ் கடவுள் மொழி என்றால், இந்தி நட்பு மொழி, அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.