தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் தொடர்புடைய காவல் துறையினர் மீது கொலை வழக்கு தொடுத்து கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் நேற்று (ஜூன் 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ராம கிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம், மக்கள் உரிமை கூட்டணி, தமிழக விவசாயிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
தந்தை, மகன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும், மருத்துவ சிகிச்சையளிக்காத நீதித்துறை நடுவர், அரசு மருத்துவர், சிறை அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.