திருச்சி: மணப்பாறை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள தனிநபர் விளைநிலங்களில், சில மயில்கள் நகர முடியாமல் மயங்கிக் கிடப்பதாக நேற்று (டிச11) வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வனத்துறையினர் சென்ற போது ஒரு ஆண் மயில் மற்றும் மூன்று பெண் மயில்கள் உயிரிழந்த நிலையில் கிடந்தன. இதையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மயில்கள் இறந்து கிடந்த நிலம் செல்வம் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து மயில்களின் உடல்கள் வனத்துறையினரால் மீட்கப்பட்டு, மரவனூர் கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. நான்கு மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.