திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெருமாம்பட்டியில் பிச்சை என்பவரின் கிணற்றுக்குள் இருந்து நேற்று (டிசம்பர் 26) துர்நாற்றம் வீசியது. இது குறித்து, அப்பகுதியில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் இறந்து கிடந்த ஐந்து மயில்களை எடுத்துச் சென்றனர்.
அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக துர்நாற்றம் வீசி வந்த நிலையில், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க முற்பட்டும் யாரும் அழைப்புகளை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதேபோல், கடந்த வாரம் மணப்பாறை அடுத்த வேங்கைக்குறிச்சி பகுதியில் ஏழு மயில்கள் சந்தேகமான முறையில் இறந்த நிலையில், தற்போது மீண்டும் கொத்துக் கொத்தாக மயில்கள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதனிடையே, வனத்துறையின் செயல்பாடு பெயரளவுக்கு மட்டுமே உள்ளதால் தேசிய பறவையான மயில் இனம், இப்பகுதியில் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.