திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடந்த ஜனவரி 28ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சுவரில் துளையிட்டு 19 லட்சம் ரூபாயையும் 450 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக நம்பர் ஒன் டோல்கேட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்து ஒன்பது மாதங்களாக துப்பு ஏதும் கிடைக்காமல் காவல் துறையினரால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் திருச்சி லலிதா ஜுவல்லரியிலும் இதே பாணியில் சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனுக்கும் அவரது கூட்டாளிகள் சுரேஷ், மணிகண்டன், கணேசன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். மணிகண்டன், கணேசன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தபின், அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ”லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இதன்மூலம் வங்கி கொள்ளைக்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவருக்குத் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்று ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கேஸ் கட்டிங் இயந்திரம், முகமூடி உள்ளிட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன” என்றார்.
இதையும் படிங்க:லலிதா ஜுவல்லரி கொள்ளை: மாஸ்டர் பிளான் முருகனிடம் காவல் துறை விசாரணை