திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் மார்ச் 28ஆம் தேதி தேர்தல் பரப்புரை செய்ய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருந்தார். திருச்சி திருவெறும்பூரில் 7.39 மணிக்கும் மலைக்கோட்டையில் 8.15 மணிக்கும் பரப்புரை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் மற்றும் தேமுதிகவினர் செய்திருந்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அங்கிருந்து திருச்சி மாவட்டம் திருவெறும்பூருக்கு காலதாமதமாக இரவு 9. 45 மணிக்கு வந்தார்.
அங்கு தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து கிளம்புவதற்கு இரவு 10 மணியை கடந்துவிட்டது. தேர்தல் விதிமுறைப்படி இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை செய்யக் கூடாது.
இதனால் மலைக்கோட்டை பகுதியில் காத்திருந்த அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் திருவெறும்பூரிலிருந்து வேன் மூலம் மலைக்கோட்டை பகுதிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்த மக்களை நோக்கி வணக்கம் வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் அவர் பேசுவார் என்று எதிர்பார்த்து இரவு 7 மணி முதல் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.