மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தமிழ்நாடு அரசு அவசரமாகக் குழப்பத்துடன் அறிவித்தது. நேரடி தேர்தல் எனச் சொல்லி கடைசி நேரத்தில் மறைமுகத் தேர்தல் என மாற்றி அறிவித்தனர். பின்னர் ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குப் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் குறித்து விவகாரத்தில் நிச்சயம் தடைவரும் என்று எதிர்பார்த்தோம். எனினும் அடுத்த நான்கு மாத அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் நியாயமான காரணங்களை முன்வைத்து திமுக அரசு உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. தொகுதி வரையறை முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சமூக நீதிக்கு எதிரானதாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றியாகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எப்போது தேர்தல் வந்தாலும் திமுக தலைமையிலான அணி வெற்றிபெறும் என்றார். வெங்காய விலை ஏற்றத்திற்காக முந்தைய ஆட்சியாளர்கள் மூன்று மாநிலங்களில் தங்களது ஆட்சியை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வைகோ, அதையெல்லாம் கருத்தில்கொண்டு மக்களின் கோபத்திற்குள்ளாகாமல் விரைவில் தட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உணவு சாப்பிடும்போது அதை குறிப்பு எடுக்கும் பழக்கம் உள்ளது என சீமான் கூறினார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வைகோ பதில் கூறாமல் சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை - அமைச்சர் காமராஜ்