திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாநகரக் காவல் துறை துணை ஆணையரின் கார் ஓட்டுநர் கடந்த இரண்டு நாட்களாக சளி, இருமலுடன் இருந்துள்ளார். எனவே, சந்தேகத்தின் பேரில் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, அவருக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல் திருச்சி அரசு மருத்துவர்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையின் நுண் கதிர்துறையில் ஸ்கேனிங் பிரிவில் பணியாற்றி வரும் அரசு பெண் மருத்துவர் ஒருவருக்கும், அதே வார்டில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது, தொற்று பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது இருவரும் கரோனா தொற்று வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரது உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : ராகுல்காந்தி பிறந்த நாள் - மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி