திருச்சி: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையாகி வருகிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பின் 8 ஆவது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார்.
இதனிடையே ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். அப்படி ரவிசங்கர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் கடன் அளவு அதிகமானதால், கடந்த பல நாட்களாக வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று (மார்ச் 25) வழக்கம் போல் காலை ரவிசங்கரின் மனைவி ராஜலட்சுமி அவரை எழுப்பிய பொழுது அவர் எழுந்திருக்கவில்லை. அதனை தொடர்ந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரவிசங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரவிசங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜ லட்சுமி, திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போன ரவிசங்கருக்கு சாய்வர்சன் என்ற ஆறு வயது மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த மசோதா நேற்று (மார்ச் 24) மாலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி அல்லது பிற இணைய விளையாட்டுகளில் ஈடுப்பட்டு, விளையாட்டிற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவம் தற்போது அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டீ தூள் பாக்கெட்களில் போதைப் பொருள் கடத்தல் - ரூ.9 கோடி போதைப் பொருள் சிக்கியதன் பின்னணி என்ன?