திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை, விராலிமலை அருகேயுள்ள அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கும் இன்று (ஆக. 28) திருமணம் நடைபெற்றது.
இதில், வழக்கப்படி மணமக்களை வாழ்த்தியும், திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றும் மண்டபத்திற்கு முன்பு மாப்பிள்ளைத் தோழர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், ”No சூடு, No சொரணை” என்ற வாசகமும், ”பல வருஷமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க? கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்க!” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன. பல்வேறு குற்றாச்சாட்டுகளில் காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவை பெருமைப்படுத்தும் விதமாக பொருத்தப்பட்டிருந்த இந்த பேனர் அத்திருமணத்தை தாண்டி பேசுபொருள் ஆனது.
மேலும், மாப்பிள்ளை நண்பர்கள் 17 பேரின் புகைப்படங்களும் அந்த பேனரில் இணைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கைலாசம் செல்லவிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து இந்தச் செய்தி காட்டுத்தீ போல் ஊரில் பரவத் தொடங்கி நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை காவல் துறையினர், நித்யானந்தாவின் புகைப்படம் பொருத்தப்பட்ட பிளக்ஸ் பேனரை உடனடியாக அகற்றினர். இந்த பேனரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.