தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜைனுல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஜைனுல் ஆப்தீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இஸ்லாத்தின் நெறிமுறைகளை மக்களுக்கு விளக்கி பிற மதத்தினருக்கு ரத்த தானம், உணவு தானம், பொருளாதார தானம் போன்ற உதவிகளை இஸ்லாமியர்கள் செய்ய வேண்டும். மத்திய அரசு இதர மதங்களில் உள்ள விவாகரத்து முறைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இஸ்லாத்தை மட்டும் குறிவைத்து முத்தலாக் முறையை ரத்து செய்ய துடிக்கிறது.
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் என்பதே கிடையாது. தண்ணீரை முறையாக விநியோகம் செய்யாததும், சேமிக்காததும்தான் காரணம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மழை பெய்யும் அரபு நாடுகளில் கூட தண்ணீர் பஞ்சம் வந்தது இல்லை. ஆகையால் நீர்நிலைகளை முறையாக பராமரித்து மழை நீரை சேமிக்க வேண்டும். தேசிய புலனாய்வு அமைப்பு இதுவரை எந்த தீவிரவாதிகளையும் பிடித்ததாக தெரியவில்லை. ஆனால் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை பிடித்து சிறையில் அடைத்து வருகிறது", என்று குற்றஞ்சாட்டினார்.