திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச் சாவடியில் இருந்து எதுமலை வரை செல்லும் கரியமாணிக்கம் சாலை உள்ளது. இனாம், சமயபுரம் ஊராட்சி பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று பாலங்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரை கிலோ மீட்டர் இடைவெளியில் பாலங்களின் கட்டுமானப்பணி, 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பாலப் பணிகளை முன்னிட்டு மாற்றுப்பாதை அருகிலேயே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக இந்த மாற்று பாதை சேறும் சகதியுமாகவும், மேடும் பள்ளமுமாக மாறிவிட்டது. மேலும் இதில் மழைநீர் தேங்கி குட்டை போல் ஆங்காங்கே காட்சியளிக்கிறது.
இதனால், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, உடனடியாக சரியான மாற்றுப் பாதையை உருவாக்கித் தர, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.