திருச்சி: நாம் தமிழர் கட்சியின் சார்பில், “வென்றாக வேண்டும் தமிழ்” என்ற தலைப்பில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் பொதுக்கூட்டம், திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் நேற்று ( ஆகஸ்ட் 25) இரவு நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக கூறுகின்றது. இந்நிலையில் திமுக அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை உடனடியாக திறந்து விடவேண்டும். அப்படி செய்தால் தான தேர்தலில் காங்கிரஸில் தொகுதிப் பங்கீடு என்று முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும், இல்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியே செல்ல வேண்டும். ஆனால், இதைத் தவிர்த்து விவசாயிகளை சந்திப்பது, மீனவர்களை சந்திப்பது, நீட் தேர்வு எதிர்த்து போராட்டம் நடத்துவது என்று இருக்கிறார்கள்” என்று கூறினார்.
மேலும், அதிமுகவின் மாநாடு ஏதாவது மாற்றத்தை கொண்டுவந்துள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான் “அ.தி.மு.க வின் மாநாடு கட்சியினரை உற்சாகப்படுத்தவும், கட்சி எடப்பாடி பக்கம் வந்து விட்டது என்பதை காட்டுவதற்கும் பயன்பட்டுள்ளது. அது அக்கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்கான மாநாடு. அது வேறு எந்த மாற்றத்தையும் எற்படுத்திவிடவில்லை. தமிழ்நாட்டில் புரட்சித் தமிழன் அண்ணன் ”நடிகர் சத்யராஜ்” மட்டும் தான். மரியாதை நிமித்தமாக ‘ர்’ சேர்த்து எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் என பட்டம் கொடுத்துள்ளனர். தமிழர்களிடம் புரட்சி என்கிற சொல் மிகவும் கேவலப்பட்டு விட்டது. எடப்பாடிக்கு பட்டம் கொடுத்திருக்கிறார்கள். எனவே, நாமும் அவரை வாழ்த்துவோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீட்டிற்க்கு விதை போட்டு தண்ணி ஊத்தி வளர்த்தவன் காங்கிரஸ், அதை மோடி வளர்க்கிறார். நீட் தேர்வானது பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் என்பதை கணித்து அதனை அன்றே தடுத்து இருக்க வேண்டும். மேலும், மருத்துவம் தான் கல்வி என்று மாணவர்களின் மனதில் பதிய வைப்பது தவறான செயலாகும். கல்வியில் மருத்துவமும் ஒன்று என மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மருத்துவம் படித்த தமிழர்கள் உலகம் முழுவதும் மருத்துவத் துறையில் மேதைகளாக உள்ளனர், அவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதாமல் வந்தவர்கள்” எனக் கூறினார்.
மேலும், “யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியத்தை ஏற்று கொண்டார் ஆனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவர் தமிழர். அதிமுக, திமுக, பிஜேபி, காங்கிரஸ் நான்கு கட்சிகளும் எனக்கு சம அளவு எதிரி தான். பிஜேபி முழு பைத்தியம் திமுக அரை பைத்தியம். பிஜேபி, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் மேகதாதுவில் அரசியல் செய்வார்கள். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டார்கள். கட்டாயம் ஹிந்தி படித்தால் தேசப்பற்று, கட்டாயம் தமிழ் படித்தால் தேச துரோகம். மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது, மதம் வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. கல்வி என்பது மானுட உரிமை அதை கொடுக்காமல் இருப்பது அரசின் கொடுமை. மக்களை முழுமையாக நேசிக்கும் நான், மக்களை கூட்டணியாக வைத்திருக்கிறேன் அதனால் தனித்து தான் நிற்பேன்” என்றார்.
இதையும் படிங்க: Madurai Train Fire Update : உத்தரபிரதேசம் - ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் தீ விபத்து - 9 பேர் பலி!