திருச்சி: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று முத்தரையர் சமூக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் செல்வகுமார் கூறியதாவது, 'தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த திமுக ஆட்சியில் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டனர். இதில் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பல தொகுதிகளில் அதிமுகவினர் தோல்விக்கு முத்தரையர் சமூகம் காரணமாக இருந்துள்ளது. ஆகையால் திமுக சார்பில் வெற்றி பெற்ற முத்தரையர் சமூக வேட்பாளர்கள் 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். கடந்த பல தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் இருந்துள்ளது. தொடர்ந்து திமுகவுடன் நட்புறவுடன் இருந்துள்ளோம். அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தரையர் வேட்பாளர்கள் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
ஆகவே மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட முத்தரையர் சமூகத்திற்கு 15 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்த வகையில் குறைந்தபட்சம் மூன்று பேருக்கு அமைச்சர் பதவி வழங்க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.