திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தாராநல்லூர், சூரஞ்சேரி பாரதி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற பிளாக் மணி (31). இவர் போலீஸ் பார்வை என்ற வார பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மணிகண்டன் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பேசுவதற்காக அரிசி ஆலை உரிமையாளர் அஜித்குமார், ஜான் கிறிஸ்டோபர் ஆகியோர் மணிகண்டன் வீட்டிற்கு சென்றனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், வீட்டிற்குச் சென்று கத்தியை எடுத்து வந்து அவர்களை குத்த முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார், ஜான் கிறிஸ்டோபர் இருவரும் கத்தியை பிடுங்கி மணிகண்டனை சரமாரியாக குத்தினர். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மணிகண்டன் உயிரிழந்தார். இதைக்கண்ட அவரது மனைவியும், குழந்தைகளும் கதறி அழுதனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், ஜான் கிறிஸ்டோபர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடும்பத்தினர் கண்முனே பத்திரிக்கை நிருபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஓமலூர் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து