திருச்சி முக்கொம்பு மேலணையில் நடைபெற்றுவரும் தற்காலிக தடுப்பணை பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று நேரில் ஆய்வுசெய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திருச்சி மாவட்டத்தில் 12.75 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் 4.5 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளும் நடந்துவருகின்றன. இந்த பணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து குடிமராமத்து பணிகளும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் கூறும் ஆலோசனைகளை ஏற்று அதற்கேற்ற பணிகளும் செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்று தடுப்பணையில் மொத்தம் இருந்த 55 ஷட்டர்களில் 9 ஷட்டர்கள் உடைந்தன. இதற்கு பதிலாக தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி 38.85 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இந்த பணி இன்று மாலைக்குள் முடிவடையும். இந்த தடுப்பணையில் மூலம் 1.8 மீட்டர் உயரம் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

புதிய தடுப்பணை 387 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த புதிய தடுப்பணைக்கு 484 தூண்கள் அமைக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக தற்போது 140 தூண்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளன. இந்த பணியை 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக தடுப்பணையில் 2 லட்சம் கன அடி தண்ணீருடன் வெள்ளப்பெருக்கு வந்தால் மீண்டும் உடைப்பு ஏற்படும் என்பது தவறான தகவலாகும். உடைப்பு ஏற்படாத அளவுக்கு வலுவான கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.