திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு எம்பி திருநாவுக்கரசர் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவிக்கும் பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியான 7 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்துக்கொண்டார். நாங்களும் இதை மக்களுக்கு தான் செலவிடுவோம்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு 10 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 5,000 ரூபாயும் வங்கிகளில் செலுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டுவது போன்ற தேவையற்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது. ஆறு மாத காலத்திற்கு தேவையற்ற பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது?, என்ன செலவு செய்யப்பட்டது? என்பது குறித்த விபரங்களை வெளியிட வேண்டும். தற்போதைய கொடுமையான சூழலிலும் லஞ்சம், ஊழல் போன்றவற்றில் ஆளுங்கட்சியினர் கவனம் செலுத்தக் கூடாது. இது மகா பாவத்திற்கு வழிவகுக்கும். எந்த ஜென்மத்திலும் இந்த பாவம் அவர்களை விட்டுப்போகாது. இந்த சமயத்தில் கமிஷன் வாங்கும் அமைச்சர்களும், அரசாங்கமும் உருப்படமாட்டார்கள்.
மறைந்த பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி, வாஜ்பாய் போன்றவர்கள் மக்களின் நினைவில் நிற்கக்கூடிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். ஆனால் மோடி அந்த வகையில் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மோடி நன்றாகப் பேசுகிறார். இதைக்கேட்டு மக்களுக்கு புளித்துப் போய்விட்டது. நன்மை தரும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பொருளாதாரத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திமுக அளித்திருக்கும் மனுக்கள் உண்மையா? பொய்யா? என்பது தேவையற்ற வாதம். உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நிராகரிக்க வேண்டும். தற்போதைய வேலைப்பளு காரணமாக அந்த மனுக்களை கால அவகாசம் கொடுத்து பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் மீதான மர்மம் இன்னும் நீங்கவில்லை. மூன்று ஆண்டுகளாகியும் விசாரணை கமிஷன் முடிவு வெளியாகவில்லை. ஜெயலலிதாவுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகள் யார் பெயரிலேயோ உள்ளது. அதுகுறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும். அவரது சொத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துகளை யார் யாரோ அனுபவிக்கும் போது, அவரது ரத்த சொந்தங்களான அண்ணன் மகன், மகள் ஆகியோர் அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
நாட்டிலுள்ள ஒரு சில பெண் தலைவர்களில் ஒருவராக ஜெயலலிதா விளங்கினார். அதனால் அவருக்கு நினைவிடம் அமைப்பதில் தவறில்லை” என்றார்.
இதையும் படிங்க: 'திருடனுக்குத் தேள்கொட்டியது போல... பதற்றத்தில் பொய் கூறிவரும் திமுகவினர்!'