திருச்சி: மாநகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் காவேரி பாலம் கட்டப்பட்டு ஏறத்தாழ 47 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பாலத்தின் ஸ்திரத்தன்மை சற்று குறைந்துள்ளதால் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பாலத்தின் தூண்களின் மேல் அதிர்வு தாங்கிகள் பொருத்தம் பணி இன்று முதல் தொடங்கி, அடுத்த இரு மாதத்திற்கு நடைபெறும் என்பதால் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு காவிரி பாலம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி போன்ற நகரங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த காவிரி பாலத்தை கடந்து தான் திருச்சி மாநகருக்கு வந்து சேர வேண்டும். இந்நிலையில் புனரமைப்பு பணிகள் காரணமாக பாலம் மூடப்பட்டுள்ளதால், சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தியே நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் நகருக்குள் வரவேண்டிய நிர்பந்தம் உள்ளது.
இதன் காரணமாக இன்று காலை ஓயா மேரி சுடுகாடு வழியாக புதிய பாலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடி நகருக்குள் நுழைந்து வருகின்றனர். இதே போல் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் போன்ற பகுதிகளில் இருந்து நகருக்குள் வருபவர்கள் திருவானைக்காவல் கும்பகோணம் சாலை வழியாக சஞ்சீவி நகரை அடைந்து பின்னர் மீண்டும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக நகருக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரபல சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்.. முதலமைச்சர் இரங்கல்..