திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவருக்கு சுஜித் என்னும் இரண்டு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், சுஜித் வில்சன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அருகிலிருந்த 30 அடி ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி விழுந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் சுஜித்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, குழந்தையை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை அமர்ந்த நிலையில் இருப்பதாகவும், குழந்தையின் அழுகுரல் ஆழ்துளை கிணற்றுக்குள்ளிருந்து கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆழ்துளைக் கிணறு பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த ஆழ்துளைக் கிணறானது ஐந்து ஆண்டுக்கு முன்பு குடிநீருக்காக தோண்டப்பட்டது தண்ணீர் வராத காரணத்தால் அக்கிணறு மூடப்படாமல் இருந்ததால் இந்த அசம்பாவித நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமலிருக்க ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் படையினருடன் வருவாய்த் துறை அலுவலர்களும் பொதுமக்களும் குழந்தையை மீட்க முயற்சித்துவருகின்றனர். மேலும், குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.