கரோனா பெருந்தொற்று காரணமாக, நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த வகையில் முக்கியச் சாலைகள், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் என்.எஸ்.பி. சாலை, பெரிய கடை வீதி, மேல பொலிவார் சாலை, காந்தி மார்க்கெட், வெல்லமண்டி, வெங்காய மண்டி, வான பட்டறை மாரியம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
இதில், மாநகராட்சிப் பணியாளர்கள் கலந்துகொண்டு கை தெளிப்பான், சிறிய அளவிலான கருவிகள் மூலம் சாலைகளின் இருபுறங்களிலும் கிருமி நாசினி தெளித்தனர். பல இடங்களில் அமைச்சரே நேரடியாக கிருமிநாசினி தெளித்தார். இந்தத் தூய்மைப் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. தேர்வுகள் எப்போது நடைபெறும்?