திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலைப்பட்டியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். திமுக பொருளாளரும், திமுக மக்களவை தலைவருமான டி.ஆர்.பாலு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, "ஓர் ஆண்டில் நேரு 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக எதிர்க்கட்சியினர் (அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்) குற்றம்சாட்டுகிறார்கள். நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால் அது மக்களுக்காகத் தான் செலவழிக்கப்படும்.

முடிந்தால் உங்களுடைய கட்சி பிரச்சனையைத் தீர்த்துவிட்டு எங்களிடம் வந்து பேசுங்கள், முடிந்தால் வழக்குப் போட்டு எங்களை உள்ளே தள்ளுங்கள். என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்கு போட்டீர்கள், அதை எல்லாம் தாண்டி தான் மந்திரியாக உள்ளோம். நேரு மனிதர். புனிதர் அல்ல என்று கூறினீர்கள். புனிதராக இருந்தால் வாயில் வெண்ணெய் தடவி படுக்கப்போட்டு போயிருப்பீர்கள்.
நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம். நாங்கள் நடத்துவது அரசியல் தான். நீங்கள் கூறுவதற்கு எதிர்க்கும் நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் ஆளும் கட்சி, என்னை நீதிமன்றத்தில் சந்திக்கிறோம் என்கிறார்கள். ஏற்கனவே என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்குகள் பதியப்பட்டது. அதிலிருந்து வெளியே வந்துள்ளோம்.
திமுக அரசு பொறுப்பேற்றபோது 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்கள் கரோனா, அதன் பின்பு வெள்ளம், அதன் பின்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இருந்தது. மீதமிருந்த சில மாதங்களில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 850 கோடியில் புதிய பேருந்து முனையம், 120 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம், தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இது போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம். திருச்சி மாவட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி என்கிற நிலைக்கு மாவட்டத்தை உயர்த்துவோம். நாங்கள் நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம், எந்த தவறும் செய்ய மாட்டோம் என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இறுதியாக சிறப்புறையாற்றிய டி.ஆர்.பாலு, "சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியை தரம் உயர்த்துவேன் என கே.என்.நேரு சொல்வது உண்மை அல்ல. அது பொய் என கூறிவிட்டு தனது பேச்சை தொடங்கினார். திருச்சி மிகச்சிறந்த மாநகரம் மட்டுமல்ல. நமது இயக்கத்துக்கான முன்னோடிகளைத் தந்த மாவட்டம் திருச்சி.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு கரோனா நிவாரணம், கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம், பெட்ரோல் விலை ரூ.3 குறைவு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 12,21,000 பேருக்கு நகைக்கடன் ரத்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை ஒதுக்கீடு இப்படி பல்வேறு திட்டங்கள் ஓர் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திராவிட மாடல் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். திராவிட மாடல் என்பது பலருக்கு புரியவில்லை. அண்ணா, கலைஞர் இருவரும் திராவிட மாடல் ஆட்சி தான் நடத்தினார்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அண்ணா சுருக்கமாகக் கூறினார். கலைஞர் ஐம்பெரும் முழக்கங்களை முன் வைத்து ஆட்சி நடத்தினார். அவர்கள் கூறியதன் அடிப்படையிலும் மாநில சுயாட்சியை முன்னிறுத்தி தற்போது ஆட்சி நடைபெறுகிறது.
மாநில சுய ஆட்சி இல்லையென்றால் சமூக நீதி வருவதற்கு வாய்ப்பில்லை. மாநில சுய ஆட்சியும் சமூக நீதியும் இணைத்துச் செயல்படும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. மாநில சுயாட்சி என்பது அடிப்படைத் தேவை. மாநில சுயாட்சிக்காக கருணாநிதி ராஜமன்னார் குழுவை அமைத்தார். அந்த குழுவின் பரிந்துரை வந்த பின்பு நாடே அது குறித்து பேசியது. மத்திய அரசில் அதிகார குவியல் இருந்தது.
அதனை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என ஜோதிபாசு, பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். சர்க்காரியா கமிஷன், வெங்கடாசலய்யா கமிஷன் உள்ளிட்ட குழுக்கள் மத்திய அரசு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியது.
ஆனால் காங்கிரஸ் அரசும் அதை செய்யவில்லை, பாஜக அரசும் செய்யவில்லை. கிட்டத்தட்ட 51 ஆண்டுகளாகியும் மாநில சுயாட்சி குறித்து இன்றும் பேசப்படுகிறது. திமுக அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினரும் விரும்புகிறார்கள். திமுக தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி குறித்து நாடு முழுவதும் எடுத்து செல்ல வேண்டும்.
சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை அனைத்து முதலமைச்சர்களுக்கும் பெற்று தந்தது கலைஞர் தான். அவரின் மகன் ஸ்டாலின் மத்திய அரசின் பிடரியை பிடித்து உலுக்கும் தைரியம் பெற்றவர். திமுக எங்களுடன் இருந்தால் என்ன என பாஜகவினர் வெளிப்படையாக கேட்கிறார்கள். அவர்களிடம் நான் உங்களிடம் சேர்ந்தால் நாங்கள் தேறாமல் போய் விடுவோம் என கூறினேன்.
திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் பாஜக வினர் மிகுந்த வெறுப்புடன் இருக்கிறார்கள். மாநில சுயாட்சி ஒரு தண்டவாளம், சமூக நீதி ஒரு தண்டவாளம் இரண்டும் இருந்தால் தான் திராவிட மாடலை முழுமையாகப் பெற முடியும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை கேஸ் விலையை உயர்த்திக் கொண்டு செல்கிறார்கள், அதில் பல லட்சம் கொள்ளை அடித்துள்ளார்கள்.
பல்வேறு வரிகளை உயர்த்தி வருகிறார்கள். இவையெல்லாம் தாண்டி திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. திமுக அரசு ஓர் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற ஸ்டாலின் கரத்தை அனைவரும் வலுப்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: நேருவிற்கு எதிராக பொங்கிய குமார் !- சொத்து கணக்கு கூறி சவால்