திருச்சி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கரோனா தொற்று நோய்ப் பாதித்து இறந்தவர்களின் உடல்களை அவர்களின் மதப்பண்பாட்டின்படி அடக்கம் செய்து வருகின்றனர். இவர்களின் சமூக சேவையைப் பாராட்டி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (மே.31) பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இதையடுத்து, திருச்சி பாலக்கரை வரகனேரியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலில் கரோனா ஆலோசனை மையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். இந்த ஆலோசனை மையத்தில் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 153 பேர் ரத்ததானம் செய்தனர். அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் வகையில் ஜமாத் சார்பில் ஆம்புலன்ஸ் சேவையையும் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்
மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் முகமது உசேன், மாநில செய்தி தொடர்பாளர் ரகமத்துல்லா,
உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.