கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், காந்தி மார்க்கெட், பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகம், மலைக்கோட்டை உள்ளிட்டப் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
இந்நிகழ்வில் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட நாற்காலிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் அமர வைக்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டன.
இதற்கு முன்னதாக, ஓட்டுநர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி, முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும், சமூக இடைவெளி பின்பற்றல் குறித்தும் சுற்றுப்புறத்தூய்மை குறித்தும் பொதுமக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஐன் அறிவுரை வழங்கினார்.