திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி பைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தையல் மிஷின், கல்வி உதவித் தொகை என ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பள்ளிகள் திறப்பது எப்போது?
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பேசுகையில், " செப்டம்பர் 1ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றுதான் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இது குறித்த முறையான "செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம்" நாளை நடைபெறவுள்ளது, அதில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்த பின்னர்தான் முடிவு எடுக்கப்படும்.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியில் உள்ள அனைவரும் கரோனா தடுப்பூசிகள் போட்டுள்ளார்களா என்பதை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டு அதனை உறுதி செய்து வருகிறோம்.
திமுகவினருக்கு ஆர்டர்
மாணவர்கள் இடை நிற்றல் கணக்கெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.அந்த விபரங்கள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கட் - அவுட், பேனர்களை வைக்கக்கூடாது என நீதிமன்றத்திற்குச் சென்றதே திமுக என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது. போஸ்டர் கலாச்சாரத்தைப் பின்பற்றக்கூடாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. திமுகவினர் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன்.
ஆளும் கட்சி என்பதால் விதிமுறைகளைப் பின்பற்றக் கூடாது என்று கிடையாது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்விற்கு மிக மிக குறைவாக தான் தேர்வெழுத உள்ளனர் . இதற்கு காரணம் கரோனா மற்றும் பள்ளிகள் இல்லாதது.
நம்மைப் பொருத்தவரை நீட்டில் இருந்து விலக்கு பெறுவதே திமுகவின் நிலைப்பாடு. அதற்கான போராட்டங்கள் தொடரும். பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது உறுதிசெய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’தற்போதைய நல்ல பெயரை பயன்படுத்தி 100% வெற்றிபெற வேண்டும்’ - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை