திருச்சி: திருச்சி மாவட்ட மைய நூலகத்தின் கூட்ட அரங்கில், வாசகர் வட்டம் சார்பில், உலக புத்தக தினப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு, கடந்த ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்ட 5 நூல்களின் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார்.
"திருச்சிராப்பள்ளி ஊரும் வரலாறும்" என்ற நூலின் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா, "மௌனம் பேசும் கடல் அலைகள்" என்ற நூலின் ஆசிரியர் தமிழினியன், "இந்திய விடுதலைப் போரில் தமிழகம்" என்ற நூலின் ஆசிரியர் திருக்குறள் சு.முருகானந்தம், "வாருங்கள் வெல்வோம்" என்ற நூலின் ஆசிரியர் அருணா ஹரிதை, "முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு" என்ற நூலின் ஆசிரியர் திருக்குறள் தாமரை ஆகியோருக்கு விருது மற்றும் பணப்பரிசுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
அதேபோல், உலகப் புத்தக தினத்தையொட்டி "புத்தகம் என்ன செய்யும்" என்ற தலைப்பில் நடைபெற்ற வாசகம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்களுக்கு கேடயங்களை வழங்கினார். தேசிய வருவாய் வழி திறனறித் தேர்விற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "நான் அமைச்சராகப் பதவி ஏற்ற உடன் முதலில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றேன். நான் வெளி மாநிலம், வெளி நாடு எங்கு சென்றாலும் முதலில் அங்குள்ள நூலங்களுக்கு சென்று எவ்வாறு உள்ளது? அங்கு இருக்கும் சிறப்பு அம்சங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தலாமா? என சிந்திப்பேன், இதை எனது பழக்கமாக வைத்துள்ளேன்.
குறிப்பாக, கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இருவரிடம் ஒரு பழக்கம் உள்ளது. அது என்னவென்றால், தங்களுக்கு பரிசாக வரும் புத்தங்களை இலவசமாக நூலங்களுக்கு வழங்குவார்கள். நமது முதலமைச்சர் ஏற்கெனவே 1,500 புத்தங்களை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது 7,500 புத்தங்களை வழங்க உள்ளார். ஆகையால், தமிழ்நாட்டின் மைய பகுதியாக இருக்கும் திருச்சியில் 'அறிவுசார் மைய நூலகம்' ஒன்று அமைத்துத் தர வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மைய நூலக அலுவலர் சிவக்குமார், மண்டல தலைவர் மதிவாணன், வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் நன்மாறன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கலக்கலாக தயாராகும் கலைஞர் நினைவு நூலகம்; மதுரையின் அடையாளமாக மாறுகிறது!