திருச்சி: காந்தி மார்கெட் ஜெயில் பேட்டை ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான கடையை அவர் ராஜா என்பவருக்கு உள் வாடகைக்கு விடுவதற்காக 1 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இந்நிலையில், ரங்கராஜனின் சகோதரர்கள் அவருக்கு தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடையை காலி செய்யச் சொல்லி ரங்கராஜ் கூறிய பொழுது ராஜா முழு தொகையும் கேட்டுள்ளார். ஆனால் ரங்கராஜ் ஒரு லட்சம் மட்டுமே தருவதாகக் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரங்கராஜ் ராஜாவை கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டது.
மேலும், ஆத்திரம் தீராமல் தொடர்ந்து ரங்கராஜ், ராஜாவை பெட்ரோல் எடுத்து ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்பொழுது இன்னொருவர் அவரைத் தடுத்து சட்டையைப் பிடித்து பின்பக்கமாக இழுத்தார். இதில் எதிர்பாராத விதமாக ரங்கராஜ் உடலில் பெட்ரோல் கொட்டியதோடு இடது கையில் இருந்த அவரது லைட்டரும் அழுத்தி பற்றிக் கொண்டது.
இதையடுத்து, பலத்த தீகாயமடைந்த ரங்கராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இதனால் காந்தி மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “நீர் தேங்கும் பகுதிகளில் புதிய மழை நீர் வடிகால்” - கே என் நேரு