திருச்சி: மணப்பாறை கரும்புலிப்பட்டி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயி ரூ. 14 லட்சம் வங்கியில் விவசாயத்திற்காக கடன்பெற்று அதில் 7லட்சம் செலுத்திய நிலையில், பல்வேறு கணக்குகளை சேர்த்து ரூ. 58 லட்சத்திற்கு கணக்கு காட்டி அவரது ரூ. 3 கோடி மதிப்புள்ள வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை ஜப்தி செய்து ரூ. 58 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்ககூடாது என்பதனை வலியுறுத்தியும், விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, மேகதாது அணை விவகாரத்தில் பிரதமரை சந்தித்து முறையிடவில்லையென்றால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என்றார். பொட்டாஷ் விலை உயர்ந்தபோதிலும் நெல்லுக்கான விலையை நிர்ணயிக்க தமிழக அரசும், மத்திய அரசும் மறுத்து வருவதாக கூறினார்.
கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் 20 நாட்களுக்கு நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து அதிகாரிகள் விவசாயிகளை காத்திருக்க வைத்திருப்பதாகவும், இதற்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு - வைத்திலிங்கம் பேட்டி