திருச்சி மாவட்டம் காஜாமலை அருகேவுள்ள மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுயம்புவாக எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் கைகூடும் என பக்தர்கள் நம்புகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இவ்வாலயத்தின் திருப்பணிகள் பொதுமக்கள், உபயதாரர்களிடமிருந்து நன்கொடை பெறும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில் இவ்வாலயத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி வாஸ்து பூஜையுடன், யாகசாலை பூஜைகள் தொடங்கின. காவிரியிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தது.
இவ்விழாவின் இறுதி நாளான நேற்று காலை 6ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூஜிக்கப்பட்ட கடங்கள் யாவும் சிவாச்சாரியார்களால் சுமந்துவரப்பட்டு, பின்னர் மீனாட்சி அம்பாள் உடனுறை சுந்தரேஸ்வரர், பரிவார தெய்வங்கள், ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு ஆகிய தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் காஜாமலை, சுப்ரமணியபுரம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: முருகனின் முதல்படைவீட்டில் முத்தாய்ப்பாக நடந்த தெப்பத் திருவிழா!