கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பால், மளிகை கடைகள், மருந்துகள், இறைச்சிக் கடைகள் ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அரசு அறிவித்தபடி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் கூட்டம், கூடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சிக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.
இதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கடுமையாக போராடினர். இருப்பினும், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறைச்சிக் கடைகளில் கூடியதால் சற்று பதற்றம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமையான நாளை (5ம் தேதி) திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மீறும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (6ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாளை, நாளை மறுநாள் ஆகிய இரு நாட்கள் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு தற்காலிக விமான சேவை