திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா 8 கிராமங்களின் சார்பில் 10 நாட்கள் நடத்தப்படுகிறது. கடந்த 19ஆம் தேதி காப்புகட்டுதல், கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழாவில், நேற்று மாலை முக்கிய நிகழ்வான பூதங்கள் விளையாடும் பெரிய படுகளம் நடைபெற்றது.
சின்னமணப்பட்டியில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த ஆண், பெண் இரு பூதங்களையும் சின்னமணப்பட்டி, குளக்காரன்பட்டி, குடையகவுண்டம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தூக்கிவர, தாரை தப்படைகளுடன் 8 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கொடி ஏந்தி படுகளம் ஆடி வந்தனர். அம்மன் ஆலயம் வந்து சேர்ந்த பூதங்கள், படுகளத்துடன் சேர்ந்து ஆலயம் முன்பு விளையாடும் நிகழ்வு நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.