திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள எப்.கீழையூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). இவர் மணப்பாறை ரயில்வே நிலையம் சாலையில் இலைக் கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை சொக்கலிங்கபுரம் பகுதியில் சுயநினைவற்ற நிலையில் சதீஷ்குமார் கிடந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, சதீஷ்குமாரின் உடல் அவசர ஊர்தி மூலம் எப்.கீழையூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, அவரது தந்தை சின்னப்பன் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி கதறி அழுதார்.
இந்நிலையில், சதீஷ்குமார் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் அடக்கம் செய்ய அங்கு திரண்ட அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துறையினர் சதீஷ்குமார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுகுறித்து மணப்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.