திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருபவர் நல்லுசாமி. இவர் அருகிலுள்ள தோகைமலையில் சொந்தமாக தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் இன்று காலை வழக்கம் போல கடைக்குச் சென்றுவிட்டார். இவரது மனைவி ஜானகி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவருக்காக மதிய உணவை எடுத்துக்கொண்டு தோகை மலைக்குச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து நல்லுசாமியின் உறவினர் ஒருவர் அவரது வீடு திறந்திருந்ததை பார்த்து நல்லுசாமிக்குத் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து வீட்டிற்கு விரைந்து வந்த நல்லுசாமியும் அவரது மனைவியும் வீட்டு கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் 18 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மணப்பாறை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.