திருச்சி: வளநாடு அருகே உள்ள கீழகுறிச்சிபட்டியில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை சீரமைக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு தரிசு நிலத்தில், ஜேசிபி மற்றும் டிராக்டரை பயன்படுத்தி நேற்று (டிச. 13) மண் அள்ளப்பட்டுள்ளது. அந்த வழியாக காவலர் பணிக்கு தேர்வானவர்களின் விவரங்களை சேகரிக்க, வளநாடு காவலர் ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த வாகனங்களை பிடித்து காவலர் விசாரணை மேற்கொண்டுள்ளார். உடனே அங்கு திரண்ட பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்றே மண் அள்ளப்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரிக்கையில், மண் அள்ள எந்தவித அனுமதியும் அளிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சுமார் நான்கு மணிநேரத்துக்கு பிறகு மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மண் கடத்தல் தொடர்பாக மூவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜேசிபி ஓட்டுநரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை - 57 பேர் கைது