திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் நேற்று இரவு கர்ணன் என்பவர் லோடு எதுவும் இல்லாமல் மணப்பாறையிலிருந்து பெரியகுளம் நோக்கி லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் லாரியை நிறுத்தி கர்ணனிடம் 500 ரூபாய் பணம் கொடுத்தால்தான் வண்டியை எடுக்கமுடியுமென்றும், இல்லையென்றால் வண்டியை காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்ல இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
அதற்கு கர்ணன் உரிய ஆவணங்களை தான் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதை ஏற்க மறுத்த வடமதுரை காவல் உதவி ஆய்வாளர் கர்ணனை பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, உடனடியாக கர்ணன் லாரி உரிமையாளர்கள், சக ஓட்டுநர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதற்கிடையே லாரி ஓட்டுநரை வடமதுரை காவல் நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, அங்குவந்த லாரி உரிமையாளர்களும் சக ஓட்டுநர்களும் கர்ணனை உடனடியாக விடுவிக்காவிட்டால் மறியலில் ஈடுபடப்போவதாக அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்துவந்த எரியோடு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் கலைந்து சென்றனர்.