கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று (ஏப்ரல் 25) அந்தந்த மாவட்ட எல்லைப்பகுதிகள் மூடப்பட்டு காவல் துறை வாகன போக்குவரத்துகளைத் தணிக்கை செய்துவந்தனர்.
இந்நிலையில், திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியான ஆண்டியப்பட்டி சோதனைச்சாவடியில் வளநாடு உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்களுடன் பணியில் இருந்தார். அப்போது அவ்வழியாக மணப்பாறையிலிருந்து விராலிமலையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சிலர் சென்றுகொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த காவல் உதவி ஆய்வாளர் அவர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். அப்போது காவல் துறையினர் தங்கள் மீது கைவைத்தாகக் கூறி சக நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வந்தவர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின் அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பினர்.
அப்போது எடுக்கப்பட்ட காணொலியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டது. அதைப் பார்த்த அவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்யுமாறு கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்த நபர்களைத் தேடிவருகின்றனர்.