திருச்சி: மத்திய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தில், மத்திய அரசுப் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு திருச்சியில் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இவ்வாறு அரசுப் பணிகளில் நியமனம் பெற்றவர்களுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பணி நியமன ஆணை வழங்கினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு ஆண்டுக்குள் 10 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்படுவர் என பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்று வரை 9 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளில் நியமனம் பெற்றுள்ளனர். விரைவில், ஒரு லட்சம் பேர் பணி நியமனம் செய்யப்படுவர்.
கடந்த 9 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் நம்பிக்கை வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை. ஆளுநர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதே நபர்தான் பாஜக கட்சி அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டு நாட்களில், ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். திருவாரூர் சென்று ஆதீனத்தைச் சந்தித்து விட்டு வரும் வழியில் ஆளுநர் வாகனத்தின் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது. ஆளுநருக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் வெட்டுக்குத்து சம்பவங்கள் நிகழ்கின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழக முதலமைச்சர் கட்டுப்படுத்தவில்லை. கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் கூட கஞ்சா புழக்கம் இருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியதை சாதாரண நிகழ்வாக பார்க்கக் கூடாது. அந்த நபருக்கு பின்னணியில் இருந்து இயக்கியது யார்? இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரித்தால்தான் முழு உண்மை தெரிய வரும். கோயம்புத்தூரில் கார் வெடிப்பு சம்பவத்தில் சிலிண்டர் வெடிப்பு என்று போலீசார் மறைத்த சம்பவத்தை என்ஐஏ விசாரித்த பின், பயங்கரவாதிகள் குண்டு தயாரிப்பதற்காக ஏற்பாடு செய்ததை கண்டுபிடிக்க முடிந்தது.
கோயம்புத்தூரில் பாலஸ்தீனக் கொடியை ஏற்றி உள்ளனர். சென்னை ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போடுகின்றனர். தேச விரோத செயல்களால் தேச விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வீசியதை என்ஐஏ விசாரிக்க வேண்டும்.
குண்டு வீசிய நபரை, திமுக பொறுப்பில் உள்ள வழக்கறிஞர்தான் ஜாமீனில் எடுத்துள்ளார். ஆனால் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில்லாமல் மக்களை திசை திருப்பும் விதமாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுககாரனுக்கு சொரணை கிடையாது. திமுக அரசாங்கத்தை பலமுறை கலைத்தது காங்கிரஸ். அவர்களோடுதான் கூட்டணி வைத்து, கொஞ்சி குலாவுகின்றனர். கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸுக்கு துணையாக இருந்தது, திமுக.
ஒவ்வொரு நேரமும், மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு விட்டு, கடந்த 2009-இல் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொன்றது காங்கிரஸும், திமுக ஆட்சியாளர்களும்தான். தமிழர்கள் நலனுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பாஜகவினர் மீதான தாக்குதல் குறித்து நான்கு பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தி வருகின்றது. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து தேசியத் தலைவர்களிடம் அறிக்கை கொடுப்பார்கள். அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க:காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான தீர்வு சாத்தியமா? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில் என்ன?