திருச்சி மாவட்டம் மணப்பாறை செளந்தரநாயகி அகத்தீஸ்வரர் கோயிலில், ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் தேர்தல் பரப்புரையின்போது அவர் பேசியதாவது, "போருக்கு போவதற்கு முன் ஒரு மகன் தனது தாய், தந்தையை வணங்கி விட்டு செல்வது போல் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை வணங்கிவிட்டு இந்த தேர்தல் களத்தில் நிற்கிறோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, திமுகவிற்காகவே நில அபகரிப்பு சட்டத்தை கொண்டு வந்தார்.
நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது உள்ளன.
நில அபகரிப்பு சட்டத்தின் முன் திமுக குற்றவாளியாக நின்று கொண்டிருக்கிறது.
எல்லா மதத்தினரும் அந்தந்த மதத்தின்படி இறைவனை வணங்கும் உரிமையை கொடுத்தது அதிமுகவும்,பாஜகவும் தான். மணப்பாறை வீரப்போர் புரிந்த மண் என்பதால் பெரியக்காண்டி அம்மன் அருளால் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும்.
இப்பகுதியில் இளநிலைப் பட்டம் முடித்தவர்களுக்கு தற்காலிக வேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்" என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ் மக்களுடைய உரிமையை பறிப்பதற்கு தயாராக இருக்கக் கூடிய திமுகவை முடிவுக்கு கொண்டு வருவதுதான் இந்த தேர்தல். தீய சக்தி திமுகவை ஆட்சியமைக்க விடமாட்டோம்.
அதிமுகவில் இருந்து யார் விலகினாலும் சரி, அவர்கள் எங்கள் கூட்டணியை அசைத்து பார்க்க முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே தலையாய கடமை' - தடங்கம் சுப்பிரமணி