திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே அண்ணா அறிவியல் மையக் கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கோளரங்கத்தில் அறிவியல் சார்ந்த செயல் விளக்கங்கள், விண்வெளி குறித்த தகவல்கள், விண்வெளி திரையரங்கம் உள்ளிட்டவை இருக்கின்றன. கோளரங்கத்தை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் குழுவாகவும், தவிர பொது மக்களும் வார விடுமுறை நாட்களில் வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம்.
அண்ணா கோளரங்க செயல்விளக்க கூடத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கூடங்குளம் அனல் மின் நிலையம் மாதிரி வடிவம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. அணு உலையால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தை போக்கும் வகையில் இந்த மாதிரி வடிவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா அறிவியல் மைய திட்ட இயக்குனர் அகிலன் கூறுகையில், ”கூடங்குளம் அணுமின் உலை குறித்து தவறான கருத்துக்கள் புரிதல் இல்லாமல் உலா வருகின்றன. நமக்கு மின்சார தேவை அதிகமாக இருந்த நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மின்தட்டுப்பாடு ஏற்பட்டதால் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காகவே கூடங்குளம் அணுஉலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இங்கு கிடைக்கும் சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு பெறப்பட்டு, தற்போது மின்தடை இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. தவறான புரிதலை தவிர்க்கும் நோக்கத்தோடு தற்போது கோளரங்கத்தில் கூடங்குளம் அணு உலையின் மாதிரி வடிவம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த வடிவத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது. இந்த மாதிரி அணு உலையை மாணவ, மாணவிகள் பொதுமக்கள் தினமும் வந்து பார்வையிடலாம். ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளை விளக்கும் ஒலிநாடவும் இடம்பெற்றுள்ளது. இதில் ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து கூடங்குளம் அணு உலையின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்” என்றார்.